ஆங்காடில் அறுந்த மின்ஒயரில் சிக்கி நான்கு மாடுகள் பலி
சோழவரம்:சோழவரம் அடுத்த, ஆங்காடு கிராமத்தில், நேற்று மாலை, குடியிருப்புகளுக்கு மின்சாரம் செல்லும் மின்ஒயர் ஒன்று திடீரென அறுந்து விழுந்தது.அதே சமயம், அவ்வழியாக மேய்ச்சலுக்கு சென்று கொண்டிருந்த, அதே கிராமத்தைச் சேர்ந்த, நாகராஜன், 35, என்பவருக்கு, சொந்தமான நான்கு எருமை மாடுகள் அறுந்த மின்ஒயரில் சிக்கின. அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து அவை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.தகவல் அறிந்த சோத்துப்பெரும்பேடு மின்வாரியத்தினர் அப்பகுதியில் உடனடியாக மின்இணைப்பை துண்டித்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். சோழவரம் போலீசாரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.சம்பவம் குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:மின்ஒயர் அறுந்தபோது, அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் யாரேனும் அவ்வழியாக சென்றிருந்தால், அசம்பாவிதங்கள் நேரிட்டிருக்கும். மின்ஒயர்களை முறையாக பராமரிப்பதில்லை. மின்வாரியத்தினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.