டெங்கு பாதிப்பு எதிரொலி இலவச மருத்துவ முகாம்
ஊத்துக்கோட்டை:டெங்கு காய்ச்சலால் பெண் ஒருவர் பாதித்த நிலையில், அப்பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. பெரியபாளையம், அம்பேத்கர் நகரில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவில் இல்லை. இதனால், இப்பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாக இருந்தது. இப்பகுதியைச் சேர்ந்த கல்பனா, 38, என்ற பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து, நேற்று அப்பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவர் கீர்த்தனா தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர், அப்பகுதி மக்களுக்கு சோதனை செய்தனர். மேலும், அங்குள்ள குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டு, குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.