கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் ஒன்று மட்டுமே இருப்பதால் தவிப்பு
கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டுகளில், 25,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான வார்டுகளில் மழைநீர் தேக்கம், குப்பை குவியல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.அதில் உற்பத்தியாகும் கொசுக்களால், மக்களின் சுகாதாரம் பாதித்து, ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் பரவலை தடுக்க உடனடியாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என, கடந்த பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.இந்நிலையில், சில தினங்களாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், கொசு மருந்து அடிக்கும் பணிகளை மக்களின் தேவைக்கு ஏற்ப முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலையில் பேரூராட்சி நிர்வாகம் உள்ளது.பேரூராட்சி நிர்வாகத்திடம், ஒரு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் மட்டுமே உள்ளது. அதுவும், தொடர்ந்து, 30 நிமிடங்களுக்கு மேல் அடித்தால், சூடாகி தீப்பற்றுகிறது.அதன்பின், ஒரு மணி நேரம் கழித்தே மீண்டும் அடிக்க முடியும். ஒரு நாளுக்கு ஒரு வார்டு மட்டுமே அடிக்க முடிவதாக துாய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.அந்த ஒரு இயந்திரத்தை வைத்து, பேரூராட்சி முழுதும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றால் குறைந்தது, 15 நாட்களாகும் என்ற அவல நிலையில் கும்மிடிப்பூண்டி உள்ளது. இதனால் கொசுக்களின் உற்பத்தி குறைந்தபாடில்லை என, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.மக்களின் சுகாதாரம் கருதி உடனடியாக கூடுதலாக நான்கு இயந்திரங்களை வாங்கி, முறையாக கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.