போக்குவரத்து நெரிசல் தவிர்க்க திருத்தணியில் காந்தி சிலை அகற்றம்
திருத்தணி:திருத்தணி நகராட்சி ம.பொ.சி.சாலை காமராஜர் காய்கறி மார்க்கெட் அருகே கடந்த 1949ல் காந்தி சிலை அமைக்கப்பட்டது. பின் கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன் காங்., கட்சியினர் காந்தி சிலைக்கு நவீன முறையில் துாண்கள் அமைத்து நிழற்குடை ஏற்படுத்தி, சுற்றி இரும்பு வேலி மற்றும் சுற்றுசுவர் அமைத்தனர். இச்சிலைக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.காந்தி சிலை அருகே, 30க்கும் மேற்பட்டோர் சாலை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் நடந்து வந்தது.இதையடுத்து திருத்தணி நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து இடையூறாக இருக்கும் காந்தி சிலையை இடமாற்றம் செய்வதற்கு கடந்த நவம்பர் மாதம் ஆர்.டி.ஓ., தீபா தலைமையில் அனைத்து கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற அனைவரும் சிலை இடமாற்றம் செய்யலாம் என ஒப்புதல் அளித்தனர்.இதையடுத்து நேற்று காலை, 6:00 மணிக்கு திருத்தணி நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் ஒன்றிணைத்து காந்தி சிலையை பாதுகாப்புடன் அகற்றி ஜே.சி.பி., உதவியுடன் சரக்கு ஆட்டோவில் வைத்து தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்று தனிஅறையில் வைத்தனர். திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த சிலை ஒரிரு மாதத்தில் திருத்தணி புதிய பேருந்து நிலையம் திறந்த பின் அங்கு வைக்கப்படும் என, நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
த.மா.கா., எதிர்ப்பு
காந்தி சிலை இடம் மாற்றம் செய்வதற்கு த.மா.கா., திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்தார். காந்தி சிலை அதே பகுதியில் கட்டியுள்ள நவீன காய்கறி மார்க்கெட்டில் பகுதியில் வைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். காந்தி சிலை இடமாற்றத்திற்கு த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.