திருத்தணியில் அகற்றப்பட்ட காந்தி சிலை காய்கறி மார்க்கெட் வளாகத்தில் வைக்க மனு
திருத்தணி:திருத்தணி ம.பொ.சி. சாலையில், 75 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட காந்தி சிலையை போக்குவரத்து இடையூறாக இருந்தால், இம்மாதம், 13ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து அகற்றினர்.திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள காந்தி சிலை, திருத்தணி - அரக்கோணம் சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வைக்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, த.மா.கா., கட்சியினர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவைர் டி.எம்.வெங்கடேசன் தலைமையில், 10க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், நேற்று, கலெக்டர் பிரதாப்பை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவில், அகற்றப்பட்ட காந்தி சிலையை, தற்போது ம.பொ.சி., சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள காமராஜர் நவீன காய்கறி மார்க்கெட் வளாகத்தில் வைக்க வேண்டும் என, கலெக்டரிடம் தெரிவித்தனர்.மனுவை பெற்று கொண்ட கலெக்டர் பிரதாப், நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.