கே.ஜி.கண்டிகையில் குப்பை எரிப்பு
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை ஊராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கவர்களை ஊராட்சி நிர்வாக துப்புரவு ஊழியர்கள் நொச்சலி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் கூடுதல் வேளாண் அலுவலக கிடங்கு அருகில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை உரம் தயாரிக்காமல், தீயில் கொளுத்துகின்றனர். இதனால், வேளாண் கூடுதல் கிடங்கில் வேலை செய்யும் அலுவலர்கள் குப்பையில் இருந்து எழும் புகையால் மூச்சு திணறல் ஏற்படுகிறது.இந்த குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பதற்கு, ஊராட்சிக்கு கணிசமான தொகை வழங்கியும், உரக்குடில்கள் அமைத்தும் மாவட்ட நிர்வாகம் கொடுத்துள்ளன. ஆனால் துப்புரவு ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டு, குப்பையில் இருந்து உரம் தயாரிக்காமல் ஒரளவுக்கு குப்பை மேடு ஆனதும், குப்பைகளை தீயிட்டு கொளுத்துகின்றனர்.அந்த வகையில் நேற்று மாலை குப்பைக்கு தீ வைத்தால், அங்கு புகை மண்டலமாக மாறியது. இதனால் வேளாண் கூடுதல் கிடங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகள் தீயிட்டு கொளுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.