| ADDED : ஜன 17, 2024 10:12 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரில், 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் தாமரை ஏரி, நீர்வளத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. நகரின் முக்கிய நீராதாரம், தற்போது குப்பை மற்றும் கழிவுநீரின் குட்டையாக மாறி வருகிறது.தாமரை ஏரியின் வடக்கு திசையில், பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அருண் நகர் உள்ளது. அங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில், ஊராட்சி நிர்வாகம் முறையாக குப்பையை சேகரிக்க தவறுவதால், அப்பகுதிவாசிகள் தாமரை ஏரியில் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், ஏரி நீர் மாசடைந்து வருவதுடன், அதன் கீழ் உள்ள மற்ற ஏரிகளும் மாசடையும் நிலை உருவாகியுள்ளது. தாமரை ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதி இருப்பதால், கழிவுநீர் மற்றும் கழிவுகள் ஏரிக்குள் வரவிடாமல் தடுக்க வேண்டும். அதற்கு நீர்வளத்துறையினரும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆவர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.