சுற்றுச்சுவர் இல்லாத அரசு மருத்துவமனை
ஆர்.கே.பேட்டை'ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ஒன்றியத்திற்கு உட்பட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை மற்றும் பல்வேறு பரிசோதனை மேற்கொள்ள வந்து செல்கின்றனர். வங்கனுாரில் இருந்து இ.எம்.ஆர்.கண்டிகை செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. நுழைவாயில் அமைப்பதற்காக எழுப்பட்ட துாண்களும் இரும்பு கம்பிகளுடன் பாதியில் கைவிடப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும், பக்கவாட்டில் உள்ள கம்பிவேலியும் உருக்குலைந்து கிடக்கிறது. மேற்கு மற்றும் தெற்கில் மருத்துவமனை வளாகம் திறந்த நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் முழுமையாக அமைத்து பாதுகாக்க வேண்டும் என, வங்கனுார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.