போக்குவரத்து சிக்னலை மதிக்காத வாகன ஓட்டிகள் மணவாள நகர் சந்திப்பில் கடும் நெரிசல்
கடம்பத்துார்,திருவள்ளூர் அடுத்துள்ளது மணவாள நகர். இப்பகுதியில், திருவள்ளூரிலிருந்து, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது.இங்கு போக்குவரத்தை சீரமைக்க தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சிக்னலை வாகன ஓட்டிகள் மதிக்காமல் சென்று வருகின்றனர்.இதற்கு, இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சில நேரங்களில் சிக்னல் இயங்காமல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.இதனால், திருவள்ளூரிலிருந்து, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வாகனங்கள் மற்றும் திருவள்ளூருக்கு வரும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகின்றன.எனவே, மணவாள நகரில் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், போக்குவரத்து போலீசாரை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.