திருத்தணி நந்தியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப்பணி விறுவிறு
திருத்தணி:திருத்தணி அருகே, நந்தியாற்றின் குறுக்கே, 7.50 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. திருத்தணி- பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில முதன்மை நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு உள்ளன. இந்நிலையில், திருத்தணி அடுத்த அகூர் ஊராட்சி எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் செல்லும் நந்தியாற்றின் குறுக்கே வாகனங்கள் செல்வதற்கு தரைப்பாலம் மட்டுமே உள்ளது. மழை காலத்திலும், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, தரைப்பாலத்தின் மீது மூன்றரை அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் செல்லும் போது வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், 12- 15 கி.மீ., சுற்றி செல்ல வேண்டியிருந்தது. இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் நந்தியாற்றின் குறுக்கே, சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 7.50 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த ஜூன் மாதம், 6ம் தேதி துவங்கியது. தற்போது பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறையின் உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் கூறியதாவது: நந்தியாற்றின் குறுக்கே, 12 மீட்டர் அகலத்திலும், 104 மீட்டர் நீளத்திற்கும், மூன்று மெகா துாண்கள் அமைத்து உயர்மட்ட பாலப்பணி கட்டுமான பணிகள் துவங்கி, துரித வேகத்தில் நடந்து வருகின்றன. இப்பணிகள், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இறுதிகள் முடிந்து உயர்மட்ட பாலம் வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.