மேட்டு தெரு தரைப்பாலம் துண்டிப்பு மணல் மூட்டைகளால் இணைப்பு
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, மேட்டுத் தெரு செல்லும் சாலையின் குறுக்கே, ஏரிகளின் உபரிநீர் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாய் மீது தரைப்பாலம் உள்ளது.ஒவ்வொரு மழைக்காலங்களிலும், மழை வெள்ளத்தில் அந்த தரைப்பாலம் முழ்குவதும், மூன்று நாட்கள் போக்குவரத்து பாதிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.அந்த தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என, கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில், சில தினங்களாக பெய்த கனமழையில், அந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து சென்றது. அந்த இடத்தில், மணல் மூட்டைகள் வைத்து தரைப்பாலம் இணைக்கப்பட்டுள்ளன.இருப்பினும் அப்பகுதியை கடக்கும் பகுதிவாசிகளும் பள்ளி மாணவர்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.உடனடியாக தரைப்பாலத்தை இடித்து, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, மேட்டு தெரு, தபால் தெரு வழியாக ஜி.என்.டி., சாலையை இணைக்கும் சாலையை புதுப்பித்து, தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற, 1.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது' என கூறினார்.