காசநோய்க்கு எக்ஸ்ரே எடுக்க வீடு தேடி வந்து பரிசோதனை
திருவாலங்காடு: திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கணேசபுரம் கிராமத்தில், காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று நடந்தது. காசநோய் அறிகுறி, பாதிப்பு, பரிசோதனை, நடமாடும் 'எக்ஸ்ரே' ஊர்தியின் பயன், அரசின் உதவித்தொகை குறித்து சுகாதார துறை சார்பில் விளக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற, 60 பேருக்கும், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, திருவாலங்காடு சுகாதார துறை அலுவலர் கூறுகையில், 'அதிநவீன நடமாடும் 'எக்ஸ்ரே' வாகனத்தை பயன்படுத்தி பரிசோதனை செய்தல், சளி பரிசோதனைக்கு அதிநவீன பரிசோதனைகள் அனைத்தும், வீடு தேடி வந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது ' என்றார்.