வாலி தீர்த்த குளம் படுமோசம் புத்துயிர் அளிக்க எதிர்பார்ப்பு
கும்மிடிப்பூண்டி:பெருவாயல் கிராமத்தில், துார்ந்து போன வாலி தீர்த்த குளத்தை துார்வாரி, சுற்றுச்சுவர் அமைத்து, புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தரவல்லி சமேத திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அருகே வாலி தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தில் வாலி புனித நீராடி, அங்குள்ள சிவனை வழிபட்டதால், சிவனை திருவாலீஸ்வரர் என்றும், குளத்தை வாலி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இக்குளம் அசுத்தமாகி, பெரும்பாலான பகுதிகள் துார்ந்து, செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. பக்தர்கள் பெரிதும் போற்றும் வாலி தீர்த்த குளம், தற்போது பரிதாபமான நிலையில் உள்ளது. எனவே, குளத்தை துார்வாரி, புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.