பொன்னேரியில் அதிகரிக்கும் நெரிசல் பீக் ஹவர்ஸ்சில் மக்கள் பரிதவிப்பு
பொன்னேரி: பொன்னேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, காலை - மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். பொன்னேரிக்கு, சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர், கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்டவைகளுக்காக வந்து செல்கின்றனர். மெதுார், பழவேற்காடு, கோளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், சென்னை செல்வதற்கு, பொன்னேரி வழியாகவே பயணிக்க வேண்டும். காலை - மாலை நேரங்களில் பள்ளி வேன்கள், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பேருந்துகள், இருசக்கர வாகன ஓட்டிகள் என, தொடர்ந்து பயணிப்பதால், நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் பொன்னேரி நகரத்திற்கு வந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர்படுத்துவதில், சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் கவனம் செலுத்துவதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் உரிய நேரத்தில் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பொன்னேரியில் போக்குவரத்து காவல் நிலையம் எங்கிருக்கிறது என தெரியவில்லை. போக்குவரத்து போலீசார், காலை - மாலை நேரங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று, 'ஹெல்மெட், டிரிங் அண்டு டிரைவ், ஓவர்லோடு' வழக்கு போடுவதில் குறியாக உள்ளனர். கேட்டால், 'மாதந்திர இலக்கு' என்கின்றனர். விதிமீறுவோர் மீது வழக்கு போடுவதில் தவறில்லை. அதேசமயம் நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதில் ஏன் கவனம் செலுத்துவதில்லை. இது, போக்குவரத்து போலீசாரின் பணி என, சட்டம் - ஒழுங்கு போலீசாரும் கண்டுகொள்வதில்லை. காலை - மாலை நேரங்களில், பொன்னேரி நகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.