இந்தியன் ஆயில் எரிவாயு முனைய தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு முனையம் உள்ளது. இங்கிருந்து எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் மூலம், சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள 'பாட்டலிங் பாயிண்ட்' என்படும் சிலிண்டரில் நிரப்பும் ஆலைகளுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டிற்காக சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பி வினியோகிக்கப்படுகிறது. மேற்கண்ட எரிவாயு முனையத்தில், 45 பேர், கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, குழு விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இடையே பேச்சு நடத்தினர்.