கே.ஜி.கண்டிகையில் புறக்காவல் மையம் அமைக்க வலியுறுத்தல்
திருத்தணி: திருத்தணி கே.ஜி.கண்டிகையில் புறக்காவல் மையம் திறக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருத்தணி—சோளிங்கர் நெடுஞ்சாலையில் கே.ஜி.கண்டிகையில், 150க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், நான்கு திருமண மண்டபங்கள், இரண்டு வங்கிகள், பொதுநுாலகம், அரசினர் மேல்நிலைப் பள்ளி, கூட்டுறவு வங்கி, டாஸ்மாக் கடை ஆகியவை இயங்கி வருகிறது. இதுதவிர பஞ்சமுக ஆஞ்சநேயர், சாய்பாபா கோவில் உட்பட அம்மன் கோவில்களும் உள்ளதால் தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் கே.ஜி.கண்டிகைக்கு வந்து செல்கின்றனர். மேலும், எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா, சிறுகுமி, தாடூர், பீரகுப்பம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் கே.ஜி.கண்டிகையில் புறக்காவல் மையம் ஏற்படுத்தவில்லை. இங்குல இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளதால் அதிகளவில் குடிமகன்கள் வந்து செல்வதால் பள்ளி மாணவர்கள் மற்றும் மக்கள் அச்சப்படுகின்றனர். இதுதவிர கே.ஜி.கண்டிகையில் அடிக்கடி தகராறு மற்றும் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா உடனடியாக எடுத்து, கே.ஜி.கண்டிகையில் புறக்காவல் மையம் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.