கடல்வாழ் உயிரினங்களை அச்சுறுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க அறிவுறுத்தல்
பழவேற்காடு:திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நேற்று பழவேற்காடு கடற்கரை பகுதியில், பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் கடற்கரையை துாய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.இதில், சென்னை வன உயிரின காப்பாளர் மணிஷ் மீனா முன்னிலை வகித்தார். காவல், வருவாய், வனத்துறை, கடலோர காவல் படை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் பங்கேற்று, கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் கழிவை சேகரித்தனர்.விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து கலெக்டர் பிரதாப் பேசியதாவது:கோவை மாவட்டம் மருதமலையில், சமீபத்தில் யானை ஒன்று இறந்தது. பிரேத பரிசோதனை செய்தபோது, அதன் இறப்பிற்கு பிளாஸ்டிக் கழிவு தான் காரணம் என்பது தெரிந்தது.அதுபோன்று, பழவேற்காடு பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணியர் விட்டு செல்லும் பிளாஸ்டிக் கழிவு, கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவால், ஏராளமான உயிரினங்கள் இறப்பது நமக்கு தெரிவதில்லை. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது அனைவரின் கடமை.அதற்காகத்தான், 'மிஷன் பார் மரைன் லைப்' என்ற திட்டத்தை துவக்கி உள்ளோம். இத்திட்டத்தின் நோக்கம், கடற்கரைக்கு வரும் மக்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து வராமல் தடுப்பது தான்.மாவட்ட நிர்வாகம் வாயிலாக அனைத்து கல்லுாரிகள், பள்ளிகள், மக்கள், தன்னார்வலர்கள் அனைவரையும் இணைத்து, ஒரு இயக்கமாக கொண்டு செல்ல போகிறோம். மக்கள் அனைவரும் ஒரு மணி நேரம் இந்த இயக்கத்திற்காக செலவு செய்து, துாய்மையான கடற்கரையை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்.இதன் வாயிலாக, கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியான கடற்கரையாக, இப்பகுதியை மாற்ற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.அதேபோல், திருத்தணி நகராட்சியில் நல்லாங்குளம் பகுதியில், நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, கமிஷனர் பாலசுப்பிரமணியம், தன்னார்வலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் என, 70க்கும் மேற்பட்டோர் 1,500 கிலோ பிளாஸ்டிக் கழிவை சேகரித்தனர்.