உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி...முடக்கம்!: வரி ஏய்ப்பு, கடத்தல், கையூட்டு அதிகரிப்பு

எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி...முடக்கம்!: வரி ஏய்ப்பு, கடத்தல், கையூட்டு அதிகரிப்பு

கும்மிடிப்பூண்டி:வடமாநிலங்களை இணைக்கும் சென்னை ---- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திர --- தமிழக எல்லையில், ஆறரை ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி முறையாக செயல்படாமல் முடங்கியுள்ளன. சாதாரண சோதனைச்சாவடி போல செயல்படுவதால், வரி ஏய்ப்பு, கடத்தல், கையூட்டு தொடர்ந்து நடப்பதால், சோதனைச்சாவடியில் ஏற்படுத்திய நவீன வசதிகளை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்துடன், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கள், உ.பி., உள்ளிட்ட வடமாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை உள்ளது.அந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக, தமிழகத்திற்குள் வரும் சரக்கு வாகனங்களின் வரி ஏய்ப்பு, கடத்தல்களை தடுக்கும் நோக்கில், தமிழக எல்லை துவங்கும் இடமான, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில், நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி திறக்கப்பட்டது.தமிழக போக்குவரத்து துறை சார்பில், 137.18 கோடி ரூபாய் மதிப்பில், முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட இந்த சோதனைச்சாவடி, 2018, ஜூன் மாதம் முதல் செயல்படுகிறது.

பிரத்யேக மென்பொருள்

போக்குவரத்து துறையுடன், வருவாய், காவல், கலால், பொது சுகாதாரம், கால்நடை, வனம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து, இதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக கணினி மென்பொருளில் ஒருங்கிணைந்து இச்சோதனை சாவடி செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.சோதனைச்சாவடிக்குள் நுழையும் ஒவ்வொரு வாகனத்தின் தகுதி சான்று, காப்பீடு, வரி பாக்கி, வழக்குகள் என, ஒட்டுமொத்த வாகன வரலாற்றையும் கண்டறியும் வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டது.மேலும், அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் சோதனை மேற்கொள்வதால், பல இடங்களில், அந்தந்த துறை சார்பில் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டு, துரித நேரத்தில் சரக்குகளை எடுத்துச் செல்லும் நோக்கில், சோதனைச்சாவடி ஏற்படுத்தப்பட்டது.

எடை ஏய்ப்பு

ஆந்திராவில் இருந்து, தமிழகம் வரும் வாகனங்களுக்கு, 10 வழித்தடங்களும், தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்களுக்கு, ஆறு வழிதடங்களும் உள்ளன. அனைத்து தடங்களிலும் எடை மேடை இருப்பதால், வரி, எடை ஏய்ப்பு தவிர்க்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.நவீனமயமான இந்த சோதனைச்சாவடி திறந்தவுடன், வரி ஏய்ப்பு, கடத்தல் மற்றும் கையூட்டுகள் முற்றிலும் தடுக்கப்படும் என, எண்ணிய மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.சோதனைச்சாவடி திறந்து ஆறரை ஆண்டுகளாகியும், எந்த நவீன வசதியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், ஒரு சாதாரண சோதனைச்சாவடி போன்றே இயங்கி வருகிறது.அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டு, ஒரு வழியாக மட்டும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த தடத்திலும் வாகனத்தின் எடை பார்க்கப்படுவதில்லை.ஆவணங்கள் சரி பார்ப்பதும், அலுவலர்களை சரி கட்டுவதும் தொடர்கிறது. இதனால் எடை ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கையூட்டுகள் தாராளமாக அரங்கேறி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதனங்கள் பழுது

மேலும், சோதனைச்சாவடிக்காக ஆறரை ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட, குளிர்சாதன இயந்திரங்கள், கணினிகள், எல்.இ.டி., டிவிக்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும், பயன்பாடின்றி வீணாகி உள்ளதாக கூறப்படுகிறது.சோதனைச்சாவடி நுழைவாயிலும், வெளியேறும் இடத்திலும் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு மையங்கள், பயன்படுத்தப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகின்றன.மீண்டும் சோதனைச்சாவடிக்கு புத்துயிர் அளித்து, முழுமையாக பயன்படுத்தினால், பாதுகாப்பான சரக்கு போக்குவரத்துடன், கடத்தல்கள், வரி ஏய்ப்புகள் தடுக்க வழிவகுக்கும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛எடை மேடைகள் பழுதாகியுள்ளன. விரைவில் பழுது பார்க்கப்படும். மென் பொருள் பயன்பாட்டிற்கு போதிய அலுவலர்கள் நியமித்தவுடன், அனைத்து வழித்தடங்களும் திறக்கப்பட்டு முழுமையாக செயல்படுத்தப்படும்' என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை