அங்கன்வாடி காலி பணியிடம் 8,048 பேரிடம் நேர்காணல்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு, விண்ணப்பித்த 8,048 பேரிடம் நேர்காணல் நடந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் 301 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 68 உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அந்த பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக, மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் பரிசோதனை செய்ததில், 8,048 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவர்களுக்கான நேர்காணல், கடந்த 21ம் தேதி முதல் நடந்து வருகிறது. அதில், அங்கன்வாடி உதவியாளர் காலி பணியிடத்திற்கு, திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் விண்ணப்பித்த 568 பேருக்கு, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 21 மற்றும் 21ம் தேதி நடந்தது.அங்கன்வாடி பணியாளர் பணிக்கு கடந்த 26ம் தேதி துவங்கியது. ஜூன் 9ம் தேதி வரை நடக்கிறது. மேலும், ஆர்.கே.பேட்டை தாலுகா அலுவலகத்தில், ஜூன் 11, 12ம் தேதி ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்தோருக்கும், 16, 17ம் தேதி பள்ளிப்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்தோருக்கும் நேர்காணல் நடக்கிறது. திருத்தணி ஒன்றியத்தைச் சேர்ந்தோருக்கு, திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 13ம் தேதியும், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் ஒன்றியத்தைச் சேர்ந்தோருக்கு, பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் ஜூன் 18- 26ம் தேதி வரையும் நேர்காணல் நடக்கிறது.