திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், அனுப்பம்பட்டு, திருவெள்ளவாயல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது.மேற்கண்ட கிராமங்களுக்கு சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், 47ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 55 கிராமங்கள்
இதில் அத்திப்பட்டு கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக, 48 கிராமங்கள், அனுப்பம்பட்டு கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக, 55 கிராமங்கள் என மொத்தம், 103 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.மேற்கண்ட, 103 கிராமங்களுக்கு தினமும், 22.50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில், இது போதுமானதாக இல்லை. கிராமங்களின் குடிநீர் தேவையில், 30 - 40 சதவீதம் மட்டுமே கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக பெற முடிகிறது.அதேபோன்று மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, சீமாவரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. மீஞ்சூர் பகுதிக்கு தினமும், 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. தேவையே, 35லட்சம் லிட்டராக உள்ளது.மீஞ்சூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், குடிநீர் தேவை அதிகமாகவும், வினியோகம் குறைவாகவும் உள்ளதால், கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், குடிநீரும் உவர்ப்பாக இருப்பதால் சமையலுக்கு பயன்படுத்த முடிவதில்லை. உவர்ப்புத்தன்மை
மேற்கண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியில் இருந்து, டிராக்டர்களில் கொண்டு வரப்படும் தண்ணீர் மற்றும் கேனில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.கோடைக் காலங்களில் குடிநீர் உவர்ப்புத்தன்மை அதிகரிப்பு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால், மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. தற்போதும் இந்த பிரச்சனை துவங்கி உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த மாதம் சட்சபை கூட்டத்தொடரின்போது, 'மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம் வாயிலாக தினமும், 40 லட்சம் லிட்டர் குடிநீர் மேற்கண்ட பகுதிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தில் இருந்தும், புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், மீஞ்சூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு, முதல் கட்டமாக கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக, 40 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டு உள்ளது.கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் குடிநீர் கொண்டு வருவதற்கான, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்காக, மீஞ்சூர் காவல் நிலையம் எதிரே, 50,000 சதுர அடி நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு, ராட்சத கிணறுகள், மோட்டார்கள் அமைத்து, அதன் வாயிலாக குடிநீர் வினியோகிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் நிலையில், மீஞ்சூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
நீர் வழங்கப்படும்
இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் கூறியதாவது:கோடைக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அனைத்து ஊராட்சிகளிலும், கூடுதல் ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், பழைய ஆழ்துளைக் கிணறுகளை சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.திருத்தணியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க, ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் பணி நிறைவடைந்ததும், திருத்தணி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்படும்.மீஞ்சூர் பகுதியில் உவர்ப்புத் தன்மை அதிகளவில் உள்ளதால், அந்த பகுதியில், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தில், கூட்டுக் குடிநீர் திட்டம் புதிதாக செயல்படுத்த, ஆய்வு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. காட்டுப்பள்ளி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவும், குடிநீர் வழங்குவதற்கான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மீஞ்சூர், மார்ச் 12-
மீஞ்சூர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் இருந்து கூட்டுகுடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் வழங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் குடிநீர் வடிகால் வாரியம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.