வினாடிக்கு 465 கன அடி கிருஷ்ணா நீர் வரத்து
ஊத்துக்கோட்டை, கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 465 கன அடி வீதம், தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி - ஏப்ரல் மாதங்களில், 4 டி.எம்.சி., ஜூலை - அக்டோபர் மாதங்களில், 8 டி.எம்.சி., என, இரண்டு தவணைகளில், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவாக இருந்தது. இதனால், கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா நீரை திறந்துவிட தமிழக அரசு கேட்டுக் கொண்டது. கடந்த மே மாதம் 24ம் தேதி முதல் தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையில், தற்போது 1,750 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நேற்று காலை 6:00 ம ணி நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டில் வினாடிக்கு, 465 கன அடி வீதம் கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. சில நாட்களாக பெய்து வரும் மழைநீரும், இதில் கலந்து வருவது குறிப்பிடத்தக்கது.