உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை

வடாரண்யேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை

திருவாலங்காடு,:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாகும்.இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேக விழா நடப்பது வழக்கம். கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்த நிலையில், 2018ம் ஆண்டு நடக்கவிருந்த கும்பாபிஷேக விழா நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டது. பின் நான்கு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் தாமதமான கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பின் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.கும்பாபிஷேக விழாவை ஒட்டி நேற்று முன்தினம் காலை: 8:00 மணிக்கு சென்றாடு தீர்த்த குளக்கரையில் விஷேச சந்தியும், இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் தொடர்ந்து நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, அவப்ருத யாகம், காலை, 7:00 மணிக்கு பரிவார யாகசாலை பூர்ணாஹூதியும் தொடர்ந்து பரிவார மற்றும் கலசங்கள் புறப்பாடு, பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடந்தது.காலை 8:00 மணிக்கு தீபாராதனை, யாத்ராதானம், கடம்புறப்பாடு நடைப்பெற்றது. காலை 9:20 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் மூலஸ்தான சுவாமிகளுக்கு சமகாலத்தில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு த்வஜாரோஹணம், பகல் 2:00 மணிக்கு மஹாபிஷேகம், மாலை 6:00 மணிக்கு வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மன் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. இதில் திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஜீவா விசயராகவன், துணை சேர்மன் சுஜாதா மகாலிங்கம், கவுன்சிலர் நந்தகுமார், ஊராட்சி தலைவர் ரமேஷ், பழையனுார் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி சிவசங்கரன் மற்றும் சின்னம்மாபேட்டை ஊராட்சி தலைவர் சரண்யா நாகராஜன் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து சென்றனர். பக்தர்களுக்கு ஒன்றிய சேர்மன் ஜீவா விசயராகவன் காரைக்கால் அம்மையார் இயற்றிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் அடங்கிய நுால் வழங்கினார்.ஏற்பாட்டை திருத்தணி முருகன் கோவிலின் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை