தடுப்புகளின்றி ஏரிக்கரை சாலை
ஆர்.கே. பேட்டை:ஆர்.கே. பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் இருந்து, சோமசமுத்திரம் ஏரிக்கரை வழியாக, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கருக்கு தார் சாலை வசதி உள்ளது. ஸ்ரீகாளிகாபுரத்தைச் சேர்ந்தவர்கள், பில்லாஞ்சி வழியாக மாநில நெடுஞ்சாலையில் பயணித்து சோளிங்கர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதற்கு மாற்றாக சோமசமுத்திரம் ஏரிக்கரை சாலை அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் வாகன நெரிசலை தவிர்த்து ஏரிக்கரை சாலை வழியாக, ஸ்ரீகாளிகாபுரம் பகுதிவாசிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், ஏரிக்கரையில் சாலையோர தடுப்புகள் ஏதும் இல்லாததால் விபத்து நேரிடும் அபாயமும் உள்ளது. நெரிசல் இல்லாத சாலையில் பயணிக்கும் பகுதிவாசிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, ஏரிக்கரை சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்த ஏரிக்கரை சாலை வழியாக, திருவள்ளூர் மாவட்டம், ராமாபுரம், நாகபூண்டி விடியங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் எளிதாக சென்றுவர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.