மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து விபத்து: 3 பேர் காயம்
கடம்பத்துார்: மின்னல் தாக்கி, தென்னை மரம் தீப்பிடித்து வீட்டின் கூரை மீது விழுந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். கடம்பத்துார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. கடம்பத்துார் பழைய வெண்மனம்புதுார் பகுதியில் மகாத்மா காந்தி நகரை சேர்ந்த அசோக்குமார், 45, என்பவர் வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் தீப்பற்றிய மரம் வீட்டின் கூரை மீது விழுந்து விபத்துக்குள்ளானது. வீட்டிலிருந்த 'டிவி' 'பிரிட்ஜ்' போன்ற பொருட்கள் கருகின. இடி சத்தம் காரணமாக அசோக்குமாரின் மனைவி சத்யா, 33 என்பவருக்கு காது கேட்காமல் போனது. மேலும் வீட்டிலிருந்து சத்தியாவின் பெற்றோர் விஜயன், யசோதா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. மூவரும் கடம்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. கடம்பத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.