மத்துார் ஏரி கலங்கல் சேதம்: சீரமைக்க கோரிக்கை
திருத்தணி: மத்துார் ஏரியின் கலங்கல் சேதம் அடைந்துள்ளதை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி ஒன்றியம் மத்துார் ஏரி, 250க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை திருத்தணி நீர்வளத்துறையினர் பராமரித்து வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஏரியின் கலங்கல் சேதம் அடைந்தது. இதை சீரமைக்காமல் துறை அதிகாரிகள் மெத்தனமாக இருந்தனர். வட கிழக்கு பருவமழை மற்றும் 'மோந்தா' புயலால் மத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த மழை பெய்தது. தற்போது மத்துார் ஏரியில் தண்ணீர் நிரம்பும் நிலையில் உள்ளது. கலங்கல் சேதமடைந்த தால், தண்ணீர் வீணாக வெளியேறி, சூர்யநகரம் ஏரிக்கு செல்கிறது. ஆனால் ஏரியின் நீர்வரத்து கால்வாய் சீரமைக்காததால், தற்போது தண்ணீர் விவசாயிகள் பயிரிட்டுள்ள விளைநிலங்கள் வழியாக செல்கிறது. இதனால் பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கலங்கல் சீரமைக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.