உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மது குடிக்க பணம் தராத மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்

மது குடிக்க பணம் தராத மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே, மது குடிக்க பணம் தராத மனைவியை, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவருக்கு, திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்ன காவனம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 46. இவருக்கு, கடந்த 2006ல் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, 25, என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்த சுரேஷ், தினமும் குடித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அதுமட்டுமின்றி, மது குடிக்க அடிக்கடி பணம் கேட்டு, பாக்கியலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2012, டிசம்பர் 17 இரவு, குடிக்க பணம் கேட்டு, சுரேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். பாக்கியலட்சுமி பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரம் அடைந்த சுரேஷ், வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை பாக்கியலட்சுமி மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். படுகாயமடைந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியலட்சுமி, சிகிச்சை பலனின்றி டிச., 21ல் உயிரிழந்தார். அதற்கு முன்பாக, பாக்கியலட்சுமி கொடுத்த வாக்குமூலத்தின்படி, பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து, சுரேஷை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, கடந்த 2013ல் திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், அரசு தரப்பில் அமுதா வாதாடினார். சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, நேற்று திருவள்ளூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார். அதில், மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தீர்ப்புக்குப் பின், சுரேஷை பொன்னேரி போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை