உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  அரசு கல்லுாரி அருகே சுரங்கப்பாதை அமைக்காவிடில் பணிகளை தடுப்பேன் எம்.எல்.ஏ., சந்திரன் ஆவேசம்

 அரசு கல்லுாரி அருகே சுரங்கப்பாதை அமைக்காவிடில் பணிகளை தடுப்பேன் எம்.எல்.ஏ., சந்திரன் ஆவேசம்

திருத்தணி: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் - திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடி வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. திருத்தணி மேதினாபுரம் பகுதியில், திருத்தணி அரசு கலை கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, 3,200 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க, பட்டாபிராமபுரம் - நாணமங்கலம் வரை 3 கி.மீ.,க்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. இதற்கு இடையே தான், திருத்தணி அரசு கல்லுாரி பேருந்து நிறுத்தம் மற்றும் சீனிவாசபுரம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு, பேருந்து மற்றும் வாகனங்கள் செல்ல சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இங்கிருந்து எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு மாணவர்கள் செல்ல, 1.5 கி.மீ., நடந்து சென்று, தனியார் பொறியியல் கல்லுாரி பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டியுள்ளது. நேற்று காலை, கல்லுாரி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்த தயாராக இருந்தனர். இதையறிந்த திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், தாசில்தார் குமார், கல்லுாரி பகுதிக்கு சென்றனர். பின், தேசிய நெடுஞ்சாலை பொறியாளர் மற்றும் அதிகாரிகளிடம், எம்.எல்.ஏ., பேச்சு நடத்தினார். அப்போது, 'மாணவர்களின் நலன் கருதி சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அதுவரை பணிகளை நிறுத்த வேண்டும். இதை மீறி பணிகள் நடந்தால், நானே களத்தில் இறங்கி சாலை விரிவாக்க பணிகளை தடுப்பேன். இது தொடர்பாக, கலெக்டரிடம் பேசுவேன்' என, எம்.எல்.ஏ., சந்திரன் ஆவேசமாக பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை