மூதாட்டியை அடித்து கொன்ற தாய், மகள் கைது
சோழவரம்:சோழவரம் அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் லட்சுமி, 65. இவரது கணவர் பிச்சாண்டி, ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகத்தில் எட்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு, ஒரு பொது சுகாதார வளாகம் உள்ளது.நேற்று முன்தினம் இரவு, பொதுகழிப்பறையை பயன்படுத்திய லட்சுமி, தண்ணீர் சரியாக ஊற்றவில்லை எனக்கூறி, அருகில் வசிக்கும் சுந்தரி, 55, அவரது மகள் கோமதி, 30, ஆகியோர் அவரிடம் தகராறில் ஈடுப்பட்டு லட்சுமியின் தலை முடியை பிடித்து, மார்பில் எட்டி உதைத்து உள்ளனர். இதில் கீழே விழுந்து, மூர்ச்சையான லட்சுமியை, அருகில் வசிப்பவர்கள் மீட்டு, சோழவரம் டோல்கேட் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து சுந்தரி, கோமதியை கைது செய்து விசாரிக்கின்றனர்.