சர்க்கரை ஆலை வெளியேற்றும் துகளால் திருவாலங்காடில் வாகன ஓட்டிகள் அவதி
திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆலைக்கு அரக்கோணம், சாலை, திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து டிராக்டர், லாரி வாயிலாக கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.நடப்பாண்டிற்கான கரும்பு அரவை இலக்கு, 2 லட்சம் டன்னாக நிர்ணயித்து, கடந்த மாதம் முதல் அரவை நடந்து வருகிறது.கரும்பு அரவையின் போது ஆலையில் இருந்து வெளியேறும் புகையுடன், கரும்பு சக்கை துகள்கள் செல்வதை கட்டுப்படுத்த, இரண்டு அடுக்கு பில்டர் போடுவது வழக்கம்.தற்போது துகளை கட்டுப்படுத்த பில்டர் போடாமல் உள்ளதால், புகையுடன் துகள்கள் வெளியேறுவதாகவும், அதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கண்களில் துகள் விழுவதாகவும் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆலையில் பில்டர் உரிய முறையில் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் துகள்கள் வரலாம்; ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.