மூடிய ரயில்வே கேட்டை கடக்கும் ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள்
திருவாலங்காடு:சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த மார்க்கமாக தினமும் 400க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.அதேபோன்று தண்டவாளத்தை கடந்து கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.எனவே தண்டவாளத்தை வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக கடக்க ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேட் 10 முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை திறக்கப்படுகிறது.சில இருசக்கர வாகன ஓட்டிகள் மூடிய கேட்டை ஆபத்தை உணராமல் கடந்து செல்கின்றனர்.அந்த சமயத்தில் ரயில் வந்தால் உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே விபத்தை தடுக்க திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ரயில்வேபாதுகாப்பு படை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.