ஆடு அறுக்கும் கூடம் இல்லை கேள்விகுறியாகும் சுகாதாரம்
பொன்னேரி:பொன்னேரியில் ஆடு அறுக்கும் கூடம் இல்லாததால் சுகாதாரம் கேள்விகுறியாகிறது.பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட ஆடு இறைச்சி கடைகள் உள்ளன. இறைச்சிக்கான ஆடுகள் சுகாதாரமாக உள்ளதா என, ஆய்வு செய்து, நகராட்சி சுகாதார ஆய்வாளரின் சான்று பெற்ற பின்தான் அறுக்கப்பட வேண்டும்.இதற்காக ஆடு அறுக்கும் கூடத்திற்கான கட்டடம், பழைய பேருந்து நிலைய வளாகத்தில் இருந்தது. அங்கு மட்டுமே ஆடுகள் அறுக்கப்பட்டன. அவற்றின் கழிவுகளையும் அங்கேயே பாதுகாப்பாக வைத்திருந்து, தொடர்ந்து சுகாதார முறையில் அப்புறப்படுத்தப்பட்டது.இந்நிலையில், ஆடு அறுக்கும் இடத்தில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், கடந்த, 2020ல் அந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.அதன்பின், ஆடு அறுக்கும் கூடத்திற்கான புதிய கட்டடம் அமைக்கப்படாமல் இருக்கிறது. இறைச்சி கடை வைத்திருப்பவர்கள், கடைகளிலேயே ஆடுகளை அறுக்கின்றனர். இறைச்சிக்காக அறுக்கப்படும் ஆடுகளின் சுகாதாரம் குறித்து, நகராட்சி சுகாதாரத்துறை கவனிப்பதில்லை. இதனால் பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. மேலும், இறைச்சி கழிவுகள், ஆரணி ஆற்றில் கொட்டி குவிக்கப்படுவதால், ஆறு நீர் மாசடைகிறது.பொன்னேரி நகராட்சிப்பகுதியில், உடனடியாக ஆறு அறுக்கும் கூடம் அமைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.