ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு கொடூர், கார்த்திகேயபுரம் கிராம சபையில் தீர்மானம்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு அந்தந்த ஊராட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மீஞ்சூர் ஒன்றியம், கொடூர் ஊராட்சியை, அருகில் உள்ள பொன்னேரி நகராட்சியுடன் இணைத்தற்கு கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம், 26ம் தேதி, குடியரசு தினத்தன்று, கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். அன்று கூட்டம் நடைபெறாத நிலையில், நேற்று, சிறப்பு கிராம சபை கூட்டம், மீஞ்சூர் பி.டி.ஓ., குணசேகரன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், கொடூர் ஊராட்சியை, பொன்னேரி நகராட்சியுடன் இணைக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுகூட்டத்தில் பங்கேற்ற கிராமவாசிகள் கூறியதாவது:மக்களிடம் முறையான கலந்தாய்வு மேற்கொள்ளவில்லை. மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், நகராட்சியுடன் இணைக்க ஒப்பதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.இதனால், நுாறுநாள் வேலை திட்டம் மற்றும் கிராமப்புறங்களுக்கான அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பறிபோகும். ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நகராட்சியுடன் இணைத்தால், ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட அரசின் ஆவணங்களை திரும்ப ஒப்படைப்போம் இவ்வாறு அவர்கள் கூறினர். அதேபோல, திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சியை, திருத்தணி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.கடந்த மாதம், 26ம் தேதி, குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில், மக்கள் பங்கேற்காமல், வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். அன்று கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை.அங்கு, நேற்று, சிறப்பு கிராம சபை கூட்டம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பஞ்சாநாதன் தலைமையிலும், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் முன்னிலையிலும் நடந்தது.கூட்டத்தில், கார்த்தியேகபுரம் ஊராட்சியை, திருத்தணி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என, கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பாக, சிறப்பு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. -- நமது நிருபர் குழு -