ரூ.14 கோடியில் மேம்பால பணிகள் துவக்கம் 5 முறை சேதமடைந்த கூவம் ஆற்று தரைப்பாலத்திற்கு விமோசனம்
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் சத்தரை ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் சத்தரைகண்டிகை வழியாக கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.இந்த பாலத்தை பயன்படுத்தி, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், அரக்கோணம் சென்று வருகின்றனர். மேலும், இந்த வழியாக தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.கடந்த 2016, 2021, 2022, 2023, 2024ம் ஆண்டுகளில் தரைப்பாலம் சேதமடைந்தது. தற்போது, 14 கோடி ரூபாய் மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று மேம்பால பணிகளுக்காக மாற்றுப்பாதை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.'இந்த உயர்மட்ட பாலம், 150 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில், 13 துாண்களுடன் அமையவுள்ளது. மாற்றுப்பாதை பணிகள் நிறைவடைந்த உடன், விரைவில் மேம்பால பணிகள் துவங்கி, 18 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி தெரிவித்தார்.கூவம் ஆற்று தரைப்பாலம், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மழை பெய்தால் சேதமடைந்தது. இதனால், பேரம்பாக்கம், இருளஞ்சேரி வழியாக, 8 கி.மீ., துாரம் சுற்றி, கொண்டஞ்சேரி வழியாக செல்லும் நிலை இருந்தது. தற்போது, புதிதாக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதால், நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம்.- ஆர்.வேலு, கடம்பத்துார்.