| ADDED : டிச 27, 2025 06:06 AM
திருவள்ளூர்: அரக்கோணத்தில் ரயில் நிலைய பராமரிப்பு பணி நடைபெறும் சமயத்தில், ஒரு சில விரைவு ரயில்களை, திருவள்ளூரில் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரக்கோணம் ரயில் நிலையத்தில், புளியங்குளம் - அரக்கோணம் இணைப்பு பாதையில், வரும் பிப்., - மார்ச் வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அரக்கோணத்தில் இருந்து சென்னை வரை செல்லும் சில விரைவு ரயில்கள், காட்பாடியுடன் நிறுத்தப்பட உள்ளன. மேலும், சில புறநகர் மின்சார ரயில்கள், திருவாலங்காடு வரை இயக்கப்பட உள்ளன. இதனால், சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு விரைவு ரயிலில் பயணியர் செல்வதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக, விரைவு ரயில் களை பயணியர் தவறவிடும் வாய்ப்பு ஏற்படும். எனவே, பிப்., - மார்ச் வரை, ஒரு சில விரைவு ரயில்களை, திருவள்ளூரில் தற்காலிகமாக நிறுத்த ரயில்வே துறையினர் பரிசீலனை செய்ய வேண்டும். திருவள்ளூரில் உள்ள ஐந்து நடைமேடைகளில், விரைவு ரயில்களை கையாளும் வசதியும், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்கு அதிகளவில் போக்குவரத்து வசதியும் உள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என, ரயில் பயணியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.