ரயில் நிலைய வளாகத்தில் தேன்கூடு பொன்னேரியில் பயணியர் அச்சம்
பொன்னேரி :பொன்னேரி ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் உள்ள வேப்பமரத்தில், பெரிய அளவிலான தேன்கூடு உள்ளது. தேன்கூட்டில் உள்ள தேனை பருக வரும் பறவைகளால், அவ்வப்போது, தேன்கூடு கலைந்து, அதிலிருக்கும் தேனீக்கள் பயணியரை கடித்து வருகின்றன.கடந்த 17ம் தேதி கூட்டமாக வெளியேறிய தேனீக்கள், ரயில் நிலையத்திற்கு வந்த பயணியரை கொட்டியது. இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, அதில் ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.தொடர்ந்து பயணிரை தேனீக்கள் அச்சுறுத்தி வரும் நிலையில், ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை என்பதால், பயணியர் அச்சுத்துடன் ரயில் நிலையம் சென்று வருகின்றனர்.இதுகுறித்து பயணியர் கூறியதாவது:பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் மருந்து வாங்கி கொடுங்கள் என்கின்றனர். ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்தால், இதுவரை நடவடிக்கை இல்லை.இனி யாரிடம் சொல்வது என்றே தெரியவில்லை. தினமும் அச்சுத்துடன் ரயில் நிலைய நுழைவாயிலை கடந்து வருகிறோம். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.