விபத்தில் சிதைந்த நிழற்குடையை சீரமைக்காததால் பயணியர் அச்சம்
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், சாமிநாயுடு கண்டிகை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. கடந்த வாரம் இந்த வழியாக சென்ற 'மாருதி ஈக்கோ' கார், நிழற்குடையில் மோதியது.இதில், நிழற்குடையின் வடக்கு பகுதியில் இருந்த சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. மூன்று பக்க சுவர்களுடன் கட்டப்பட்டிருந்த நிழற்குடையின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்துள்ள நிலையில், இரண்டு பக்க சுவர்களுடன் நிழற்குடை அபாயநிலையில் உள்ளது.மற்ற இரண்டு சுவர்களும் விரிசல் விட்டுள்ளது. இதனால், எந்த நேரத்திலும் நிழற்குடை இடிந்து தரைமட்டமாக நேரிடலாம் என்ற நிலை உள்ளது. இதனால், சாமிநாயுடுகண்டிகை கிராமத்தினர் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.விபத்து நடந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையிலும், இந்த நிழற்குடையை இடித்து அகற்ற ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதால், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.