புதுவாயல் பஸ் நிறுத்த சந்திப்பில் நிழற்குடை இன்றி பயணியர் தவிப்பு
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அருகே புதுவாயல் சந்திப்பு உள்ளது. இங்கு ஆந்திரா, சென்னை மற்றும் பெரியபாளையம் நோக்கி செல்லும் மூன்று சாலைகள் சந்திக்கின்றன.சிறுவாபுரி முருகன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், பள்ளி, கல்லுாரிகள் செல்வோர் என, தினசரி ஆயிரக்கணக்கான பேருந்து பயணியர், மூன்று திசை சாலைகளிலும் காத்திருந்து பேருந்து வாயிலாக பயணம் செய்து வருகின்றனர்.இச்சந்திப்பில், மூன்று மார்க்கத்திலும் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், சாலையோரம் ஆபத்தாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழையிலும், வெயிலிலும் பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, பயணியரின் நலன் கருதி, மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் பயணியர் நிழற்குடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.