வீடுகளை சுற்றி தேங்கிய மழைநீர் வெளியே வரமுடியாமல் மக்கள் தவிப்பு
திருத்தணி: குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சியில் உள்ள மகா விஷ்ணுநகர், வள்ளிநகர், கவுரியம்மன் நகர் மற்றும்மோட்டூர் ஆகிய கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழையால், கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் வீடுகளை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மழைநீர் வெளியேறுவதற்கு வசதியாக வடிகால்வாய் அமைக்காமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. குடியிருப்புகளை சுற்றியும் மழைநீர் தேங்கியுள்ளதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் பலத்த மழை பெய்யும் போது மேற்கண்ட பகுதிகளில் வீடுகளை சுற்றியும் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. எனவே மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டும், உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றியும், மழைநீர் வடிகால்வாய் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கக்கன் நகர், ராமரெட்டிப்பாளையம், அரியன்வாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. தெருச்சாலைகளிலும், குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்த நிலையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மழைநீர் செல்வதற்காக, சாலைகள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளன. வாகனங்கள் அதில் சிரமத்துடன் பயணிக்கின்றன. பேரூராட்சி நிர்வாகத்தினர் மோட்டார்கள் மூலம், தண்ணீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு உள்ளனர். நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், மழைநீர் செல்ல வழியின்றி கிடப்பதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.