மழை பெய்தாலே மின்சாரம் துண்டிப்பு ஆற்காடுகுப்பம் பகுதியில் மக்கள் அவதி
திருவாலங்காடு:ஆற்காடுகுப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், மழை பெய்தாலே உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆற்காடுகுப்பம், இலுப்பூர், அரும்பாக்கம் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு, மாமண்டூரில் அமைந்துள்ள துணை மின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த கிராமங்களில், சில மாதங்களாக, தினமும் பகல் நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், குறைந்த மின்னழுத்தம் உள்ளதாகவும், அப்பகுதியில் வசிப்போர் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாலை, இரவு நேரங்களில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், 3 - 5 மணி நேரம் கழித்தே, மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆற்காடுகுப்பம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கூறியதாவது: கடந்த மூன்று நாட்களாக, மாலை நேரங்களில் மழை பெய்கிறது. லேசாக மழை பெய்தாலே, உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. பராமரிப்பு பணி, மரங்கள் விழுதல், மின் கம்பிகள் உராய்வு உள்ளிட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. மாதாந்திர பராமரிப்பின் போது, இவற்றையெல்லாம் சரிசெய்ய மாட்டார்களா என தெரியவில்லை. உயரதிகாரிகள் தான், இதற்கு தீர்வு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கனகம்மாசத்திரம் மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மழை காரணமாக, மின்னல் தாக்கியதில், மாமண்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 'இன்ஸ்லேட்டர்'கள் வெடித்தன. அதனால், ஆற்காடுகுப்பம் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது. தற்போது, மின்சாரம் சீராக வினியோகிக்கப்பட்டு வருகிறது' என்றார்.