உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்பு பகுதிக்குள் மழைநீரை வெளியேற்ற எதிர்ப்பு சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

குடியிருப்பு பகுதிக்குள் மழைநீரை வெளியேற்ற எதிர்ப்பு சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

மீஞ்சூர்: பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு குடியிருப்பு மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது. மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால், அதை வெளியேற்றுவதற்காக, பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டி குழாய் பதிக்கப்பட்டது. இவ்வாறு வெளியேறும் மழைநீர், சாலையின் மறுபுறம் உள்ள நாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட பத்மாவதி நகரை சூழ்ந்துள்ளது. இதனால், குடியிருப்பு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நேற்று பத்மாவதி நகர் குடியிருப்பு மக்கள், 100க்கும் மேற்பட்டோர், பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், இருபுறமும் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து, குடியிருப்பு மக்கள் கூறியதாவது: கலைஞர் நகர் பகுதியில் இருந்து மழைநீர் செல்வதற்கான கால்வாய் வசதி உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை அகற்றி, கால்வாயை துார்வாரி மழைநீரை வெளியேற்றவில்லை. மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே இரவோடு இரவாக பள்ளம் தோண்டி, கான்கிரீட் உருளைகளை பதித்து, எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீரை வெளியேற்றுகின்றனர். எங்கள் பகுதியில் இருந்து மழைநீர் வெளியேற வழியின்றி, வீடு, தெருக்களில் தேங்கியுள்ளது. இதனால், சுகாதார பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எந்தவொரு பகுதியும் பாதிக்காத வகையில், அரசு நடவடிக்கை எடுக்காமல், பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளை மட்டும் பாதுகாக்க நினைப்பது சரியில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், 'பத்மாவதி நகர் பகுதி வழியாக மழைநீர் வெளியேற்றுவது நிறுத்தப்படும்' என, அதிகாரிகள் உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், மண் போட்டு கால்வாய் மூடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ