மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
16 hour(s) ago
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
16 hour(s) ago
ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
16 hour(s) ago
பெரியபாளையம்:திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் - பெரியபாளையம் வரை, இருவழிச் சாலையாக இருந்ததை, தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்கால போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இச்சாலையை, தாம்பரம்- மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையுடன் இணைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை பாடியில் இருந்து அம்பத்துார், ஆவடி, வழியாக திருத்தணி தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும், இருசக்கர வாகனம், கனரக வாகனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் வாகனங்கள், திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் சாலையை பயன்படுத்தி வருகின்றன.இந்த சாலை இருவழி சாலையாக இருந்ததால், கனரக வாகனங்கள் செல்ல கடும் சிரமப்பட்டன. மக்கள் தொகை, கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகள் நேரிட்டன.இதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், நான்கு வழிச்சாலையாக மாற்ற, 111 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மரங்கள் அகற்றம்
அதன்படி, திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை முதல் வெங்கல், அம்மனம்பாக்கம் வரை 11 கி.மீ., துாரம் சாலை விரிவாக்கம் செய்ய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதேபோல், சாலை விரிவாக்க பணிக்காக, தாமரைப்பாக்கம் வரை, 374 சாலையோர மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. முதற்கட்டமாக, திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் மார்க்கமாக, 13.12 அடி அகலத்துக்கு மழைநீர் வடிகால் மற்றும் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டன. தற்போது வரை, 4 கி.மீ., துாரத்துக்கு வடிகால் மற்றும் தார் சாலை அமைத்தல் என, 30 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. ஏற்கனவே பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலை, 23 அடி சாலையாக இருந்தது. தற்போது விரிவாக்கம் செய்யும் நான்கு வழிச்சாலை, இரு மார்க்கத்திலும் தலா 49.21 அடி சாலையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது.நடுக்குத்தகை முதல் அம்மனம்பாக்கம் வரை பல்வேறு பிரிவுகளாக கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டு, சாலை பணிகள் நடந்து வருகின்றன. புழுதி காற்று
இந்நிலையில், ஸ்ரீபதி நகர், நாசிக் நகர், முல்லை நகர் உள்ளிட்ட சில இடங்களில் சாலை சுருங்கி, ஒரு வழி பாதையாக மாறியுள்ளது. இதனால், பல இடங்களில் புழுதி காற்று, ஜல்லிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, சமூக ஆர்வலர் சடகோபன் கூறுகையில், “திருநின்றவூர் -- பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை --- திருத்தணி தேசிய நெடுஞ்சாலை வழியாக தாம்பரம் ---- மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையை இணைத்தால் தான், இந்த சாலை விரிவாக்க பணிகள் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக, வடமாநிலத்திற்கு செல்லும் கனரக வாகனங்களும் நெரிசல் இல்லாமல் எளிதில் கடக்க முடியும்,” என்றார்.இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருநின்றவூர் - பெரியபாளையம் வரை, சாலை அகலப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும், வரும் செப்., மாதத்திற்குள் நிறைவடையும் வகையில், பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது' என்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago