வீதிகள் தோறும் குப்பை குவியல் வாகனமின்றி திணறும் ஊழியர்கள்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றித்திற்கு உட்பட்டு 42 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றியம் முழுதும் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சேர்த்து, 280க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர். ஆனால், அனைத்து ஊராட்சிகளுக்கும், 500 பணியாளர்கள் தேவை. இதனால், துாய்மை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், குப்பை சேகரிப்பு வாகனங்கள் பெரும் பற்றாக்குறையாக உள்ளதாகவும், பெரும்பாலான வாகனங்கள் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.திருவாலங்காடு ஒன்றியத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் சேகரிக்கப்படும் குப்பை, ஊராட்சி பொது இடத்தில் கொட்டப்பட்டு, அதன்பின், 15 --- 20 நாட்களுக்கு ஒரு முறை அகற்றப்படுகிறது. மொத்தமுள்ள 42 ஊராட்சிகளுக்கும் தள்ளுவண்டி, பேட்டரி வாகனம் என, 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.இதில், 35க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இந்த வண்டிகள் சரியான முறையில் பராமரிக்காததால், தற்போது பாழடைந்து காயலான் கடைக்கு செல்லும் நிலை உள்ளது.இதனால், திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை, கனகம்மாசத்திரம், மணவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வீடுகள்தோறும் சென்று குப்பை சேகரிக்கும் பணியில், இரு ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், வீதிகள் தோறும் குப்பை குவிந்துள்ளது.எனவே, அந்தந்த ஊராட்சியின் மக்கள்தொகைக்கு ஏற்ப, புதிதாக குப்பை சேகரிப்பு வாகனங்களை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், துாய்மை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி, கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.