திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி... 91.49 சதவீதம்:கடந்த ஆண்டை விட 0.17 சதவீதம் கூடுதல்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று வெளியான பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவில், 91.49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு பெறப்பட்ட, 91.32 சதவீதத்தை விட, 0.17 சதவீதம் அதிகமாகும். வழக்கம்போல, மாணவர்களை காட்டிலும் மாணவியரே 4.93 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2, அரசு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில், திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் மொத்தம், 244 பள்ளிகளைச் சேர்ந்த, 12,995 மாணவர், 14,563 மாணவியர் என, மொத்தம், 27,558 பேர் தேர்வு எழுதினர். இதற்காக, மாவட்டம் முழுதும், மொத்தம், 105 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வினாத்தாள், 18 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. தேர்வு அறையில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இத்தனிப்படையினர், தேர்வு எழுதும் பள்ளிகளுக்கு நேரில் சென்று திடீர் சோதனை நடத்தி வந்தனர்.இந்த நிலையில், நேற்று, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய, 11,550 மாணவர், 13,662 மாணவியர் என, மொத்தம், 25,212 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு, 91.49 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சற்று அதிகம்
திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, திருவள்ளூர் கல்வி மாவட்டங்களில் 11,863 மாணவர், 13,762 மாணவியர் என, மொத்தம், 25,625 பேர் தேர்வு எழுதினர். இதில், 10,410 மாணவர், 12,991 மாணவியர் என மொத்தம், 23,401 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதம். இந்த ஆண்டு, 91.49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், கடந்த ஆண்டை விட, 0.17 சதவீதம் அதிகமாக உள்ளது.கொரோனா தொற்று காலத்திற்கு, திருவள்ளூர் மாவட்டத்தில், மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் 27ம் இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் 36வது இடத்திலேயே பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.மேலும், மாவட்டத்தில் உள்ள 102 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 5 பள்ளிகள் மட்டுமே நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. சீத்தஞ்சேரி, சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, தேர்வாய் கண்டிகை அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி.ஆவடி இமாகுலேட் பெண்கள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் தண்டரை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் மட்டும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.இவற்றைத் தவிர தனியார் பள்ளிகள் என, மாவட்டத்தில் மொத்தம், 64 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பெண்கள் தேர்ச்சி அதிகம்
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர் 88.88 சதவீதம், மாணவியர் 93.81 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர் 87.75 சதவீதம், மாணவியர் 94.40 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த சில ஆண்டுகளாக மாணவியரே தேர்ச்சி சதவீதத்தில் முன்னிலையில் உள்ளனர்.
சி.இ.ஓ., ஓய்வு; கலெக்டர் டில்லி பயணம்
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவினை கல்வித் துறையினர், கலெக்டர் தலைமையில் வெளியிடுவது வழக்கம்.இந்த ஆண்டு, அந்த வழக்கம் இல்லாமல் தேர்வு முடிவினை கல்வித் துறையினர் முறையான வழிகாட்டுதல் இன்றி வெளியிட்டனர். காரணம், கலெக்டர், புதுடில்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க சென்று விட்டார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடந்த மாதம், 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு வகிப்பவரும் தேர்வு முடிவினை முறையாக வெளியிடாமல், அலட்சியம் காட்டினார்.இதன் காரணமாக, தேர்வு முடிவினை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையினர் பத்திரிகைகளுக்கு வெளியிட முடியாமல் திணறினர்.முக்கியமான தேர்வு முடிவு வெளியாகும் சமயத்தில், கல்வித் துறை மற்றும் கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால், தேர்வு முடிவு குறித்து முறையான தகவல் கிடைக்காமல், பத்திரிகையாளர்களும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கடும் சிரமப்பட்டனர்.இனியாவது, தேர்வு முடிவு வெளிவரும் சமயத்தில் பள்ளி கல்வித் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.