சிசிடிவிக்கள் பொருத்த நிதி ஒதுக்கீடு பொன்னேரி நகராட்சியில் தீர்மானம்
பொன்னேரி:பொன்னேரி நகராட்சி கூட்டம், தலைவர் பரிமளம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.அதில், கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கூறினர். நகராட்சி கமிஷனர் எஸ்.கே.புஷ்ரா, அவர்களுக்கு பதில் அளித்தார்.நகராட்சியில் பணிகள் சரிவர நடப்பதில்லை எனவும், நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அலுவலக அதிகாரிகள், திட்டப்பணிகளை கண்காணிப்பதில்லை எனவும், தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.கூட்டத்தில், மின்தடை காலங்களில் அலுவலக மின் தேவைக்காக, 17.35 லட்சம் ரூபாயில், 82.5 கே.வி.ஏ., ஜெனரேட்டர் வாங்குவது என, முடிவெடுக்கப்பட்டது.நகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதானதை தொடர்ந்து, அவற்றை அகற்றிவிட்டு, 3.50 லட்சம் ரூபாயில் புதிதாக பொருத்த முடிவானது.திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கு வளாகத்தில், பாதுகாப்பு கருதி, 3.40 லட்சம் ரூபாயில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், பொன்னேரி அதாவுல்லாஷா தெருவில், 4.35 லட்சம் ரூபாயில், உயர்கோபுர மின் விளக்கு பொருத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.