ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரையில் அமரும் கர்ப்பிணியர்
திருத்தணி:திருத்தணி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், நிறைமாத கர்ப்பிணியர் தரையில் அமர்ந்து காத்திருந்து, சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருத்தணி அம்மா உணவகம் அருகே உள்ள தெருவில், நகர ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, தினமும் 100க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு, கர்ப்பிணியருக்கு சிகிச்சை, ஆலோசனை மற்றும் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதுதவிர கர்ப்பிணிகளுக்கு பிரசவமும் பார்க்கப்படுகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் கர்ப்பிணியருக்கு பொது பரிசோதனை, ரத்த பரிசோதனை, குழந்தையின் வளர்ச்சி, இதயத்துடிப்பு போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதனால், ஏராளமான கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். இங்கு, போதிய இருக்கை வசதி இல்லாததால் கர்ப்பிணியர் நின்றும், தரையில் அமர்ந்தும், நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதனால், கர்ப்பிணியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து, போதிய இருக்கை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்ப்பிணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.