இருளிப்பட்டில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சோழவரம், சோழவரம் அடுத்த இருளிப்பட்டு கிராமத்தில், மீன்பிடி வலைகளுக்கான இழைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், 35 பேர் உறுப்பினர்களை கொண்ட தொழிற்சங்கம் ஏற்படுத்தப்பட்டது.தொழிற்சங்கத்திற்கு நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து, கடந்தாண்டு, அதன் நிர்வாகிகளை பணி நீக்கம் செய்தது. இதனால், தெழிலாளர்கள், 48 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள், நிர்வாகம் மேற்கொண்ட பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் பணிக்கு திரும்பினர்.கடந்த சில நாட்களுக்கு முன் தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர், வேறு கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அங்கு, அவர்கள் பணிக்கு செல்லாததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இதை கண்டித்து தொழிலாளர்கள், ஐந்து நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தமிழக அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என, அவர்கள் வலியறுத்தி உள்ளனர்.