தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு பூந்தமல்லி பஸ் நிலையத்தில் அவதி
பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பூந்தமல்லியை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.இந்த பேருந்து நிலையத்தின் அருகே, பூந்தமல்லி நீதிமன்றம் உள்ளது. இங்கு வரும் வழக்கறிஞர்கள் மற்றும் தனி நபர்கள் சிலர், தங்களின் கார்களை, நிலையத்திற்குள் பேருந்துகள் செல்லும் பாதையிலும், நிலையத்தின் உள்ளேயும் ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.மேலும், ஷேர் ஆட்டோ, மினி வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இது தவிர, நடைபாதை கடைகளும் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன.இதனால், பேருந்து நிலையத்தில் பேருந்தை ஓட்டி சென்று திருப்ப முடியாமல், அரசு பேருந்து ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.தனியார் வாகனங்களால் நெரிசல் ஏற்படுவதால், பயணியரும் வேதனைக்குள்ளாகின்றனர்.பூந்தமல்லி அரசு பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளாக உள்ள தனியார் வாகன ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு, நகராட்சி மற்றும் காவல் துறை இணைந்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.