வீடு தாமதமானதால் 5 பேருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
சென்னை, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நாளில் வீட்டை ஒப்படைக்காமல் தாமதம் செய்த கட்டுமான நிறுவனம், பாதிக்கப்பட்ட, ஐந்து பேருக்கு தலா, 2 லட்ச ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில், சொரஞ்சேரி கிராமத்தில், 'சில்வர் ஸ்டான்ட்ஸ் பிராப்பர்ட்டீஸ், கலர் ஹோம் டெவலப்பர்ஸ்'ஆகிய நிறுவனங்கள் இணைந்து குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்துகின்றன. இங்கு வில்லா வகை வீடுகள் விற்பனை செய்ய, இந்நிறுவனங்கள் முடிவு செய்தன.இவற்றில், என்.வினுகுமார், டி.சரண்யா - எம்.புவனேசன், ஏ.கிருபாகரன் - ஆர்.சுஜாதா, கே.அருள்ராஜ், வி.ரம்யா ஆகிய ஐந்து பேர், வீடு வாங்க ஒப்பந்தம் செய்து, பணம் செலுத்தினர். இவர்களுக்கு, ஆறு மாதங்களில் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் உறுதி அளித்து இருந்தது.ஆனால், குறிப்பிட்ட காலத்தை கடந்து, 10 மாதங்கள் வரை தாமதமாக கட்டுமான நிறுவனங்கள் வீட்டை ஒப்படைத்துள்ளன. அப்போதும், வீட்டில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து அத்திட்டத்தில் வீடு வாங்கிய, ஐந்து பேரும் தனித்தனியாக ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக ஆணைய விசாரணை அலுவலர் என். உமாமகேஸ்வரி பிறப்பித்த பொது உத்தரவு:மனுதாரர்கள் குறிப்பிட்டபடி, அவர்களுக்கு வீடு தாமதமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணியில் குறைபாடுகளையும் மனுதாரர்கள் சுட்டி காட்டியுள்ளனர்.இதனால், பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் ஐந்து பேருக்கும் தலா, 2 லட்ச ரூபாய் வீதம் இழப்பீடும், தலா, 50,000 ரூபாய் வழக்கு செலவுக்காகவும் கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும். அடுத்த, 90 நாட்களுக்குள் இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.