புதுமாப்பிள்ளை படுகொலை சம்பவம் உறவினர்கள் சாலை மறியல்
கடம்பத்துார்:கடம்பத்துார் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடம்பத்துார் ஊராட்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் ராஜ்கமல், 20. இவர், மூன்று மாதங்களுக்கு முன், வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷினி, 20, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு, கடம்பத்துார் சென்று, 'யமஹா ரியோ' பைக்கில் நண்பர் தீபன் என்பவருடன் வீட்டிற்கு வந்த போது, ஆறு பேர் மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து, இவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட போது, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில், பி.டி.ஓ., அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். கடம்பத்துார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு நடத்தியதால், கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.