ஊத்துக்கோட்டை - கோயம்பேடு கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - கோயம்பேடு இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இங்கு, 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கல்லுாரி இல்லை. இதனால், கல்லுாரி படிப்பிற்கு பொன்னேரி, சென்னை மற்றும் சுற்றியுள்ள இடங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். அதேபோல், இப்பகுதியில் இருந்து சென்னை மற்றும் சுற்றியுள்ள இடங்களுக்கு ஏராளமானோர் வேலைக்கு செல்கின்றனர். பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு இவர்கள் செல்கின்றனர். இவர்கள் அனைவரும் அரசு பேருந்துகளையே நம்பி உள்ளனர். ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் இருந்து, ஒரு பேருந்து மட்டுமே கோயம்பேடிற்கு இயக்கப்படுகிறது. கடும் நெரிசலால், படிக்கட்டு பயணம் தவிர்க்க முடியாததாக உள்ளது. பத்துக்கும் குறைவான பேருந்துகள், செங்குன்றம் வரை இயக்கப்படுகின்றன. இதில் பயணம் செய்வோர், செங்குன்றம் சென்று, அங்கிருந்து பிற இடங்களுக்கு மற்றொரு பேருந்து மூலம் செல்ல வேண்டி உள்ளது. இதனால், குறித்த நேரத்திற்கு, வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை - கோயம்பேடு இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க அறிவுறுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.